Monday, March 14, 2016

விக்கிரவாண்டி - 7

அத்தியாயம் - ஏழு

திண்டிவனத்தை வண்டி சென்றடைய 4 30 மணியானது. வினோத் வண்டியிலிருந்து இறங்கி, ஓட்டமும் நடையுமாக அந்த டைம் கீப்பரின் அறையை அடைந்தான்.

அங்கே ஒரு ஓரத்தில் விட்டத்தைப் பார்த்தவாறு அவன் ஆயா இருக்கக் கண்டான். சின்ன வயசில் அவனைத் தன்னுடனேயே வைத்திருந்து வளர்த்த ஜீவன். தனக்கு ஒன்றென்றால் தாங்க முடியாமல் உடனே குலதெய்வக் கோயிலுக்குப் பொங்கல் வைக்கவும், தலைமுடி கொடுக்கவும் வேண்டிக் கொள்வது மட்டுமன்றி அதை நிறைவேற்றவும் எப்போதுமே தவறியதில்லை. ஒருமுறை அவனுக்கு அம்மை போட்டபோது நேர்த்திக்கடன் வைத்துப் பின்னர் அம்மன்கோயிலிலே அங்கப் பிரதட்சணம் செய்ததும் இன்றும் கண்ணில் ஓடியது. நான் ஏன் இப்படி ஒரேயடியா இவங்களை ஓரங்கட்டினேன்னு நெனச்சான். தன்னை விட இந்த உலகத்தில் ஒரு மிகப் பெரிய சுயநலவாதி இருப்பானென்று தோன்றவில்லை. உடல் கூசியது.

உள்ளே ஓடினான்.

இவனைப் பார்த்ததும்தான் பாட்டியம்மாக்கு மீண்டும் உயிர் வந்ததுபோல் இருந்தது.

எழுந்து வந்து இவனைக் கட்டிக் கொண்டார்.

பேரனும் பாட்டியம்மாயும் கட்டித் தழுவிக்கொள்ளும் கண்கொள்ளக் காட்சியை டைம்கீப்பர் பார்த்து மனதில் நினைத்தார், என்ன ஒரு பாசமான குடும்பம்டா, நாமும் இருக்கிறோமே.

எங்க பேரன் தன்மேல கோவப்படுவானோன்னு பயந்துக்கிட்டிருந்த பாட்டியம்மாக்கு அவன் கட்டிப் புடிச்சி அழுதோன்னே மனசு ரொம்பக் கஷ்டமாப் போச்சு.

‘ஏன் தம்பி, என்னக் காணோமின்னு அம்மாவுக்கும், மாமாவுக்கும் சொல்லிட்டியாடா ராசா, உன்ன ரொம்பத் திட்டினாங்களாடா?’

‘இல்ல ஆயா, நான் இன்னும் யாருக்கும் இதப் பத்தி மூச்சுகூட விடல்ல. உன்னப் போய்த் தொலைக்க இருந்தேனே, அத நெனச்சாத்தான் மனசு கெடந்து அடிச்சிக்குது’

‘விடு கண்ணு, வீட்டுக்கு ஒண்ணும் சொல்ல வேணாம். நான் கொஞ்சம் சூதானமா நடந்திருந்தா இவ்வளவும் நடந்திருக்காதில்ல’

‘ஏன் ஆயா, என்னை எழுப்பியிருந்தா நான் உங்கூட வந்திருப்பேன் இல்ல’

‘இல்லைய்யா, நீ நல்லா தூங்கிட்டு இருந்தியா. அதில்லாம தூங்கிறப்ப எழுப்புனா உனக்கு பயங்கரமாக் கோவம் வரும்னு உங்க அம்மா வேற சொல்லியிருந்தாளா, அதான் நானாவே இறங்கிப் போய்ட்டேன்’

வினோத்திற்கு மலைப்பாக இருந்தது. தப்பு தன்மேல்தான். எங்கே எழுப்பினால் பேரன் தன்மேல் பாய்வானே என்றுதானே பாவம் தனியாக இறங்கிப் போயிருக்கிறார். இதுவே தான் ஒரு குழந்தையாய் இருக்கையில் இப்படி இறங்கிப் போயிருந்தால் என்ன நடந்திருக்கக்கூடும் என்று நினைத்து பார்த்தான். புல்லரித்தது.

முதலாவதாக அந்த நேரக்காப்பாளருக்கு நன்றி சொன்னான். அப்புறம் அந்த ஓட்டுனருக்கு ஃபோன் போட்டு அவருக்கும் பாட்டியம்மா கிடைத்த தகவலைச் சொன்னான். காலையில் ஏதாச்சும் சென்னை செல்லும் வண்டி வருமாவென்று கேட்டான். பின்னர் பாட்டியம்மாயிடம் வந்தான்.

‘ஆயா, இப்ப வண்டியேதும் கெடையாதாம். ஒண்ணு பண்ணுவோம். திரும்பவும் சென்னைக்கே போவோம். கேட்டா வண்டி வழியில ரிப்பேர் ஆச்சுன்னு சொல்லிக்கலாம். நீ எங்ககூடவே இருந்திரு ஆயா. நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்’

பாட்டியம்மாக்கு இதைக் கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னக் குழந்தைபோல தலையாட்டினார்.

இருவரும் சென்னை செல்லும் வண்டிக்காகக் காத்து நின்றார்கள்.


(முற்றும்)


பி.கு:


அன்று எம்மைத் தம் தோள்களில் சுமந்த நல்லுள்ளங்களை இன்று நாம் நம் மனங்களிலாவது சுமப்போமே !

2 comments:

  1. நிகழ்வுகளைச் சொல்லிச் சென்ற விதமும் முடித்த விதமும் நன்று

    ReplyDelete
  2. தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete