Monday, March 7, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 8

அத்தியாயம் - எட்டு

காவல்நிலையத்தில் அந்த இருவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்கள். வழக்கமான மரியாதைகள் செய்யப்பட்டன.
அலறினார்கள். மயக்கமுற்றார்கள்.
செந்தில்குமாரிடம் ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கப்பட்டது.
குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இவனுக்கு அது சந்தேகமாகவே பட்டது.
காவல்துறையின் அதீத கவனிப்புகளால் லாக் அப் மரணங்கள் பல நிகழ்ந்த சம்பவங்கள் கண்முன் ஓடின.
இவன் காவல்நிலைய அதிகாரியிடம் பேசினான்.
         ‘சார், அந்த ஸ்டேட்மென்ட நான் வாபஸ் வாங்கிக்கிறேன்’
         ‘எதுக்கு?’
‘அவங்க ஏதோ தெரியாமத் தப்புப் பண்ணிட்டாங்க. மன்னிச்சு விட்டா மறுபடியும் அதே தப்பைப் பண்ண மட்டாங்க’
‘அதெல்லாம் முடியாது. கோர்ட்ல முடிவு பண்ணட்டும்’
‘சார், அதான் நானே கம்ப்லேண்ட்ட வாபஸ் வாங்கிறேன்னு சொல்றனே?’
ஃபோன் அடித்தது. டிஎஸ்பி ராஜநாதன் லைனில் இருந்தார். காவல்நிலைய அதிகாரி வியர்த்தார். யெஸ் சார், ஓகே சார் என்று ஃபோனை வைக்கையில் ரொம்பவே களைத்திருந்தார்.
உடனே ‘305’ என்று விளித்தார். சம்பந்தப்பட்டவர் வந்தவுடன் டிஎஸ்பியிடம் பெற்றவற்றை வட்டியுடன் அவரிடம் பகிர்ந்தார். இப்பொழுது வியர்வை தலைமாறியது. யெஸ்ஸும் ஓக்கேயும் வாய் மாறியிருந்தன.
‘யோவ், திருடனைப் புடிச்சது போதுமைய்யா. போய் அந்த நாயப் புடிக்கிற வழியப் பாரும்’
டிஎஸ்பிக்கு அப்பொழுதுதான் இவன் ஞாபகத்துக்கு வந்தான். உடனே என்ன நினைத்தாரோ லாக் அப்புக்குப் போய் அவர்கள் இருவரையும் வெளியே அழைத்தார். அடி வாங்கி மயங்கியவர்களுக்கு இப்பதான் சுயநினைவு திரும்பிருந்தது. மெதுவாக வெளியே வந்தார்கள்.
‘டேய் பசங்களா, நீங்க பண்ணின புண்ணியம் இந்த வாட்டி சார் ரொம்பக் கேட்டுக்கிட்டாரேன்னு சொல்லி உங்கள விடுறேன். இன்னொரு வாட்டி மாட்டுனீங்க, மவனே பொலி போட்டுருவேன்’
அவர்கள் இருவருக்கும் அழுகை வந்தது. சடாரென்று இவன் காலில் விழுந்தார்கள்.
      ‘சேச்சே, என்ன காரியம் பண்றீங்க ரெண்டு பேரும், எழுந்துருங்க முதல்ல.’
எழுந்தார்கள்.
‘பொழைக்கிறதுக்கு எவ்வளவோ நேர்மையான வழிகள் இருக்கு. அத விட்டுட்டு இப்படியெல்லாம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது நண்பர்களே. புறப்படுங்க’
காவல்நிலைய அதிகாரியுடன் மற்றக்காவலர்களும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தார். இந்தப் பையன் மீது தனியொரு மரியாதை பிறந்தது.
அதிகாரி ஏட்டின் காதில் என்னமோ குசுகுசுத்தார்.
சரியென்று தலையாட்டியவர் செந்தில்குமாரிடம் நெருங்கி வந்து,
‘வாங்க தம்பி, உங்களைப் போற வழியில வீட்டுல விட்டுறச் சொல்ராரு ஐயா’
செந்தில்குமார் சரியென்று தலையாட்டி விட்டு, அதிகாரிக்கு நன்றி சொல்லிக் கைகுலுக்கிவிட்டு அவரைப் பின் தொடர்ந்தான்.



(தொடரும்)

1 comment:

  1. செந்தில் குமாரின் புகாரின்பேரில் அல்லவே கடத்தல்காரர்கள் பிடிக்கப்பட்டார்கள் கொடுக்காத புகாரை இவர் வாபஸ் வாங்க கடத்தல்காரர்கள் விடுவிக்கப் பட்டனரா சில பல சந்தேகங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete