Wednesday, March 9, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 9

அத்தியாயம் - ஒன்பது 

வீட்டை நெருங்கியதும் வண்டியிலிருந்து இறங்கினான் செந்தில்குமார்.
வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டு விட்டுப் போகுமாறு பணித்தான்.
அழைப்பை ஏற்றவர் கூடவே வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் பெண்குழந்தை வந்து அவனைக் கட்டிக் கொண்டது.
அப்பாவும் பெண்ணும் கொஞ்சுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தினான். அவள் முகத்தில் சிறிய சலனம் எட்டிப் பார்த்ததற்குத் தனது பதவியும் துறையுமே காரணம் என அவர் அறிவார்.
வயசான தம்பதியரை வரவழைத்தான். அவர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டார்.
பெண்குழந்தை மட்டுமே எந்தத் தயக்கமும் இன்றி இவரிடம் வந்தது.
      ‘உன் பேர் என்ன பாப்பா?’
      ‘என் பேரு ஸ்வஸ்திகா. உன் பேரு என்ன தாத்தா?’
தன் பெயர் என்னவென்று சொல்லலாமா என்று சற்று யோசித்தார். பின்னர் சொன்னார்.
      ‘போலீஸ் தாத்தான்னு சொல்லும்மா’
குழந்தை சிரித்தது.
      ‘துப்பாக்கி எங்க தாத்தா?’
தன்னிடம் துப்பாக்கி இல்லாததால் குழந்தை நம்ப மறுப்பது புரிந்தது. வண்டியில் ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு வந்தது தப்போ என்று மனம் ஒரு கணம் சஞ்சலப்பட்டது.
      ‘அடுத்த வாட்டி எடுத்திட்டு வர்றேன்மா.’
      ‘நான் உனக்கு ஒரு பாட்டு பாடிக் காட்டட்டுமா?’
இவர் பதிலுக்குக் காத்திராமல் குழந்தை தன் பாட்டுக்குக் கையை ஆட்டிப் பாட ஆரம்பித்தது. இந்தப் பிராயம்தான் வாழ்க்கையில் சிறந்த பருவம் என்பதை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.
காபி வந்தது. அந்தப் பொழுதுக்கு அது தேவாமிர்தமாய் இனித்தது.
தான் சார்ந்த துறை காரணமாக வீட்டார் தன்னுடன் பரிச்சியப்படாமை புரிந்தது.
காப்பி சாப்பிட்டு முடிந்ததும் விடை பெற எண்ணி எழுந்தார்.
      ‘தத்தா, என் புது ஃப்ரெண்டுக்கு ஹாய் சொல்லிட்டுப் போ’
அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஒரு அறைக் கதவைத் திறந்தாள்.
அங்கே கண்ட காட்சி அவரை தன் சட்டைப்பையினுள் கை விட்டு ஒரு காகிதத்தை எடுத்துப் பார்க்க வைத்தது.
சந்தேகமே இல்லை. இளம்பழுப்பு நிறத்தில் முகத்தில் ஒரு கறுப்புப் புள்ளியுடன் ஒரு நாய்.
பொறி தட்டியது.
அதேதான்.
      ‘ஜுஜிலிப்பா’
அவர் குரலுக்கு விசுக்கெனத் திரும்பிப் பார்த்தது.
குழந்தை கதவை மூடினாள்.
      ‘பாய் தத்தா’
வாய் பாய் சொன்னதே தவிர மனசு முழுக்கவும் அந்த அறையிலேயே தங்கி விட்டது.
செந்தில்குமாரை தனியே அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
சகல விபரங்களும் சொல்லப்பட்டன.
குழந்தை தூங்கியவுடன் அவரிடம் அதனை ஒப்படைப்பதாக வாக்குக் கொடுத்தான்.
இரவு நெடு நேரமாகியும் அழைப்பு வரவில்லை.
கண் சொக்கும் நேரத்தில் ஃபோன் அலறியது.
அவர் எழுந்து கிளம்ப ரெடியானார்



(தொடரும்)

1 comment:

  1. கதை நேரான பாதையில் தொடர்கிறேன்

    ReplyDelete