Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 12

அத்தியாயம் - பன்னிரண்டு

முருகானந்தம் கமிஷனரிடம் ஒரு விடயத்தைச் சொல்லாமல் விட்டிருந்தார். அதில் கொஞ்சம் சுயநலம் இருந்தது. சம்பத் மற்றும் சுந்தர் கொடுத்த தகவலின்படி காணாமல்போன டிரைவர் பழனியைக் கொலை பண்ணியதாகச் சொல்லப்பட்ட சேட்டுப் பெண் பானுரேகா, இவர் மகள் பவித்ராவின் நெருங்கிய தோழி. பவித்ராவுடன் இவரைக் கண்டதும் அவள் கண்களில் அச்சம் படர்ந்தது. நடந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் அவரிடம் ஒப்பித்தாள்.

      ‘என்னைக் கைது பண்ணி ஜெயில்ல போட்டுருவாங்களா அங்கிள்?’

அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை இளம் பிஞ்சுகள் இப்படியான காமக்கொடூரன்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன என எண்ணினார். தலை சுற்றியது.

விடை பெற்று மகளுடன் கிழம்பினார்.

மகள் இந்த சம்பவத்தால் ரொம்பவே பயந்திருந்தாள்.

      ‘அப்பா, பானுரேகா பாவம்பா, அவளைக் காப்பாத்துங்கப்பா’

பவித்ராவின் மன்றாடும் குரல் அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

மறுநாள் காலை தலைப்புச்செய்தி

      ‘முன்னாள் மத்திய மந்திரி மகன் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது’

கீழே தலையை மூடியபடி காவலர்களுடன் அவர் நடந்து செல்லும் படம் பிரசுரமாகி இருந்தது. அரசியல் பழிவாங்கல் என்று அவர் தந்தையின் பேட்டி 3ம் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

சுந்தரும் சம்பத்தும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். குண்டுவைத்த பொறியாளர்கள் மருத்துவ சிகிச்சையின் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்களென நம்பிக்கையுள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜப்ப கவுடாவைக் கைது செய்ய இன்டர்போல் உதவியைத் தமிழகக் காவல்துறை அணுகியுள்ளது.

விவேகானந்தன் லீவு போட்டு ஊருக்குப் போய் விட்டான். அனேகமாகக் கல்யாணம் முடிந்து திரும்ப உத்தேசம். அவன் லாப்ரடார் பக்கத்து வீட்டுப் பரிமளாதேவி பராமரிப்பில், படு ஜாலியாக.

கிருஷ்ணவேணிக்குப் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளை அமைந்து போக அவள் அம்மா கோவில் கோவிலாக ஏறிக்கொண்டிருக்கிறாள். தங்கை ஜோதி டாக்டர் கனவுகளுடன் படிக்கிறாள்.

தலைமைக் காவலர் பலராமன் இன்னும் தனது பழைய சைக்கிளில் வலம் வருகிறார், பொழைக்கத்தெரியாத மனுசன் என்னும் மனைவியின் வசவுகளுடன்.

முருகானந்தம் டி.ஐ.ஜியாகப் பதியுயர்வு பெறுகிறார். அவர் நண்பர் டாக்டர் சத்தியமூர்த்தி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தலை மற்றும் முண்டம் பற்றிய முரண்பாடுகளை வேண்டுமென்றே தவற விட்டிருந்தார்.

பழனியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ‘காணவில்லை’ மனு காவல்நிலையத்தில் தூங்கித் தூசி சேர்க்கிறது. ஊரில் அவன் வருவானெனும் நம்பிக்கையுடன் வயோதிகத் தாய் காத்திருக்கிறார்.

புகழின் படம் மாலை சூடப்பட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டது. அவன் சார்ந்த சொத்துக்களுக்கு வக்கீல்கள் உறவினர்களுடன் செட்டு சேர்ந்து போராடுகிறார்கள்.

பானுரேகாவும் பவித்ராவும் அதே பள்ளியில் படிக்கிறார்கள்.

சொக்கலால் சேட் தினமும் பூஜை பண்ணி எல்லாக் கடவுள்களையும் துணைக்கழைத்துக் கொண்டு மற்றவர் வயிற்றில் அடிக்கிறார்.

ஆறுமுகம் அடுத்தவனைச் சபிச்சு சபிச்சு, இன்னும் லோடு அடிக்கிறார். முத்துசாமி காலமாயிட்டாரு, பாவம் வயசாயிடுச்சு.

சென்னை,கோவை,மதுரை,தஞ்சை எங்கும் மக்கள் வழக்கம் போல இருக்காங்க. 

ஒரு புதுப்படத்தலைப்பு எல்லாரையும் ஈர்த்தது

‘கொல், ஆனால் சொல்லாதே’ !



(முற்றும்)

4 comments:

  1. என் டாஷ் போர்டில் 8 பதிவுகளே வந்தன. படிக்கப் படிக்க முழுக்கதையும் வந்தது படித்தேன் கதை திகிலாக இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதப்பட்டது போல் தெரிகிறதுபடிக்கும் போது எனக்குத் தோன்றியவற்றை எழுதுகிறேன் ஜோதியின் தங்கையின் வயது ஏழு என்று படித்த நினைவுஅவளுடைய மொபைல் இயக்கும் அறிவு சந்தேகப்பட வைக்கிறது. இந்தமாதிரி குண்டு வெடிப்புகளுக்கான மோடிவ் சரியாகப் படவில்லை. அமெரிக்காவில் இருக்கும் கௌடா யார் என்று சரியான விளக்கம் இல்லை. மேலும் தையைத்தான் அந்தப் பெண்கொண்டு கொடுத்தாள் முண்டம் பற்றிய செய்தியே கடைசியில்தான் அதுஎப்படி வந்தது புகழ் மயங்கிக் கீழே விழுந்து இறந்தார் என்றால் எப்படி. எழுதும் போது நீங்கள் நினைத்தவற்றைச் சரியாகக் கூறவில்லை என்றே தெரிகிறது நானும் அருமை பேஷ் பேஷ் என்று சொல்லிப் போகலாம் முடியவில்லை. முயற்சிக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. கதையில் உள்ள ஓட்டைகளைச் சுட்டி காட்டியமைக்கு நன்றி. இனிவரும் முயற்சிகளில் அதிக கவனம் எடுக்கிறேன்.

    ReplyDelete
  3. உங்கள் பெருந்தன்மை நெகிழச் செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. இது பெருந்தன்மையன்று, பிழையை உணர்ந்து திருத்திக் கொள்ளும் பாங்கு.

      Delete