Tuesday, February 23, 2016

அப்பா வருவாரா? - 3

அத்தியாயம் - மூன்று

இவ மாளவிகா. க்ரியேடிவ் ஹெட், டோனி லூயி க்லோபல் வென்சர்ஸ்.

மகாதேவன் ஊருக்குப் போனதும் இவளுக்கு அழுகை, அழுகையா வந்திச்சு. குழந்தையைத் தூங்க வச்சிட்டு பாத்ரூமில போய் ஓன்னு அழுதா.

கல்யாணமான நாள் முதல் எங்கேயும் இவளை விட்டுட்டுப் போனதில்லை அவன்.

போனா சேர்ந்து போவாங்க, இல்லை வீட்டிலேயே முடங்கிடுவாங்க. குழந்தை, மனைவியென்று இவர்களைச் சுற்றியே அவன் வளைய வந்தது இவளுக்கு இப்ப தனிமையை எதிர் கொள்ள முடியாமல் பண்ணியது.

இவர்கள் திருமணம் காதல் மணமென்றாலும் இரு குடும்பங்களின் ஆதரவுடன் நடந்தது.

தொழில் சார்ந்த கருத்தரங்கொன்றில் இவளைக் கண்டு, மனம் தடுமாறி, காதலைச் சொல்ல நேரடியாக வீட்டுக்கு வந்து அப்பாவுடன் பேசியது எல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது.

இவளைவிட அதிர்ஷ்டசாலி இல்லையென்றுதான் இவள் தோழிகளும் பேசிக் கொள்வார்கள்.

மகா இல்லாத முதல் நாள் வஷிஷ்டைக் கிளப்பி ஸ்கூல் பஸ்ஸில் அனுப்பி விட்டுத் திரும்புகையில் ஷங்கர் காருடன் காத்திருந்தான்.

ஷங்கரை ஏற்கெனவே தெரிந்தபடியால், சினேகமாய்ப் புன்முறுவி வண்டியில் ஏறிக்கொண்டாள்.

சம்பிரதாயமான விசாரணைகளுடன் பயணம் தொடங்கி முடிந்தது. பரஸ்பரம் தொலைபேசி எண்கள் மட்டும் பறிமாறப்பட்டன.

இரவில் வாட்ஸ் அப்பில் ஒரு குட் நைட். இவள் அதைச் சட்டை செய்யவில்லை.

மறுநாள் காரில் போகும்போது இளையராஜா பாட்டு பிடிக்குமாவென்றான். இவளின் அனுமதியுடன் எம்பி3 ஒலித்தது. இனித்தது.

இரண்டு நாட்களின் பின் காப்பி சாப்பிடலாமாவென்று கேட்டு, அனுமதியுடன் காஃபி ஷாப்.

தன்னையுமறியாமல் அவன் நன்னடத்தையால் அவன் பக்கம் ஈர்க்கப்படுவதை அறிந்தாள்.
எச்சரிக்கை மணி முதல் முறையடித்தது.

கணவனின் பிரிவால் மனதில் தோன்றிய ஏக்கம் சாய்மானம் தேடுகிறதென்று அதை அலட்சியப்படுத்தினாள்.

இப்பொழுது ஃபேஸ்புக்கில். ஃபோனில் என்று அடிக்கடி தொடர்பு எல்லைக்குள்ளேயே இருப்பது இதமாயிருந்தது. 

நம்பிக்கை பல விஷயங்களைப் பகிரத் தூண்டியது.

சரியான நேரம் பார்த்து அஸ்திரத்தை எறிந்தான் ஷங்கர்.

வலை விரித்துவிட்டு வேடன் காத்திருந்தான்.

மான் தானாக வந்து சிக்கியது.



(தொடரும்)

2 comments:

  1. மீண்டும் சஸ்பென்சுடன் ....?

    ReplyDelete
  2. முடிச்சுகள் மெதுவாக அவிழும், பொறுமை காக்கவும்.

    ReplyDelete