Thursday, February 11, 2016

தந்திரவியூகம் - 4

அத்தியாயம் - நாலு

சுந்தர் படங்களைப் பாயில் பரப்பினான். தாவணி,பாவாடையில் காதில் ஜிமிக்கி, நெற்றியில் பொட்டு,கழுத்தில் முத்துமாலை, கூந்தலில் மல்லிகையென விதவிதமான போஸ்களில் அவனவள்.

எல்லோரும் பேச்சு,மூச்சின்றி அதையே வெறித்துப் பார்த்தார்கள். பின்னர் அடுத்தவன் சொத்தை அபகரித்ததுபோல வெட்கப்பட்டார்கள்.

ஜோசப் மௌனத்தை கலைத்தான்.

படங்கள் பிரமாதமா வந்திருக்கு மாமு, எப்படியோ காரியத்த சாதிச்சிட்ட

சுந்தர் : அதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்

பாலன் :  ‘ சரி மச்சான், ஃபீலிங் ஆவாத. இனி என்ன பண்ணலாம்?’

ஜோசப் : ஒரு நல்ல பெயரா தேர்வு பண்ணுங்க பார்ப்போம்

பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில் முடிவான பெயர்….

குழலிசை கமலினி

செந்தில்  : ‘கேக்கும்போதே கவிதை காதில பாயுறமாதிரி இருக்கு மச்சான்

சுந்தர் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்.

பாலன்  : ‘டேய்,ஏதோ ஒரு ஃப்லோவில சொல்லிட்டான்,நீ கண்டுக்காத மச்சி

கந்தனுக்கு நண்பர்களின் பங்களிப்பு உற்சாகத்தைக் கொடுத்தது.

ரெண்டே நாட்களில் ஜோசப்பின் தயவால் முகனூலில் இணைந்தாள் கமலினி.

முதலில் ஒரு 10 பேருக்கு அழைப்பு சென்றது.

எதிர்பார்த்தது போலவே அந்தப் பத்துப் பேரும் நண்பர்களானார்கள்.

மறுநாள் நண்பர்கள் எண்ணிக்கை 100ஐத் தண்டியது.

இடையிடையே செய்திகள்,புகைப்படங்கள் என கமலினி அப்லோட் பண்ணினாள் (?)

எல்லாத்துக்கும் லைக்கும்,கமென்டும் பறந்தன.

இதற்கிடையே கமலினி சச்சின் டெண்டுல்கர், இளையராஜா, தமிழ்மண் என சில குறிப்பிட்ட தளங்களைத் தான் விரும்பித் தொடருவதாக அறிவித்து அதிலிருந்தும் துணுக்குகள் பகிர்ந்தாள்.

கந்தசாமியின் பெயர் கவித்துவமாக இல்லையெனக்கூறி அவனுக்கு கவிப்பித்தன் என்று பெயர் மாற்றப்பட்டது.

அவனும் முகனூலில் இணைக்கப்பட்டான்.

ஆட்டம் சூடு பிடித்தது.

தமிழக ஆண்கள் வயது,படிப்பு,சமுதாய நிலையென எந்தப் பாகுபாடுமின்றி கமலினிமேல் மையல் கொண்டார்கள்.

ரெண்டே மாதத்தில் அவள் முகனூல் கணக்கு 5000 நண்பர் எண்ணிக்கையைத் தொட்டது,ஸ்தம்பித்தது.

கமலினியின் அவதாரம் அடுத்த கட்டத்தை அடையவேண்டியதை நண்பர்கள் உணர்ந்தனர்.

அவளுக்கெனப் பிரத்தியேகமான முகனூல்ப் பக்கம் தயாரானது.

தனது நட்பு வட்டத்தை இதில் இணையுமாறு அவள் பணித்தாள்.

அப்படியே ஆட்டுமந்தைகள் தலையாட்டி சம்மதித்தார்கள்.

கவிப்பித்தனின் கவிதைப் பக்கமும் விருப்புப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட, அவள் ரசித்ததையெல்லாம் தமிழகமும் ரசித்தது.

கந்தனுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது.

இப்படி ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிய எமகாதகியாகிய கமலினி () ஃபாத்திமா சுந்தருடன் தன் படுதாவுக்குள்ளிருந்து காஃபி ஷாப்பில் காப்பசீனோ உறிஞ்சிக்கொண்டிருந்தாள் !

அருகில் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது.

டேய் மச்சான், யார்றா இது குழலிசை கமலினி,செமையா இருக்கா பாரு!’

மச்சான், அவ ஒரு தேவதடா, நானும் ரெண்டு மாசமா நூலு வுடுறேன், இன்னும் ஒண்ணும் மசியக் காணோம்

டேய், நானாச்சும் பரவாயில்ல, கல்யாணம் ஆகல, ஒனக்கு பொண்டாட்டி,ரெண்டு புள்ளைங்க இருக்குடா

அது பாட்டுக்கு அது,  இப்படி  ஒரு  ஃபிகர்  கெடைக்க  உயிரையே கொடுக்கலாம்டா

சுந்தரும், ஃபாத்திமாவும்  ஒருவரை  ஒருவர்  பார்த்துக்  கொண்டனர்.

வியர்த்தனர். பயந்தனர்.

வெளியே குளிர்காற்று வீசத்தொடங்கியது.



………………………………………………(தொடரும்)

2 comments:

  1. சில விளையாட்டுக்கள் வினையாகலாம்

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா

    ReplyDelete