Wednesday, February 24, 2016

அப்பா வருவாரா? - 4

அத்தியாயம் - நாலு

அன்று சென்னையில் நல்ல மழை.

வழக்கத்திற்கு மாறாக ஷங்கர் வரவில்லை. ஃபோன் பண்ணினான். மழையில் வண்டி ட்ராஃபிக்ல மாட்டிருச்சு, வர லேட்டாகும்னான். ரொம்ப சாரி கேட்டான்.

ஒரு மணி நேரம் சென்ற பின் மறுபடியும் ஃபோன். கீழே காத்திருந்தான். தெப்பலாக நனைந்திருந்தான்.

பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது.

அன்று வீடு வர ரொம்ப நேரமானது.

பாவம் குழந்தை வஷிஷ்ட் பக்கத்து வீட்டிலேயே தூங்கிப் போயிருந்தான். சமையல் பண்ணி, அவனை எழுப்பி தூக்கத்தோடு ஊட்டி விட்டு, எல்லா வேலைகளையும் முடித்துப் படுக்க 11 தாண்டி விட்டது.

மழை விடாது பெய்து கொண்டிருந்தது.

மாளவிகாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவமானமாய் இருந்தது. ஆத்திரமாய் இருந்தது.
மகாதேவன்மேல் கொண்டிருந்த நம்பிக்கை எல்லாம் காணாமல்போய் ரொம்ப நேரமாகி இருந்தது.

தான் இவ்வளவு நாளும் மலைபோல் நம்பியவன் இப்படி ஒரு துரோகம் செய்வானென்று இவள் கொஞ்சமும் நினைக்கவில்லை.

ஊரில் ஒரு விதவைப் பெண்ணுடன் தொடர்பு வைத்துப் பின்னர் அது அம்பலமானவுடன், அசிங்கப்பட்டு அங்கிருந்து இங்கே வந்த கதையை ஷங்கர் கண்,காது,மூக்கு வைத்துப் போட்டுக் கொடுத்துவிட்டான்.

‘எப்படியெல்லாம் நல்லவன் மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்டான்?’ கோவத்தால் தூக்கம் வர மறுத்தது. பழி வாங்கும் எண்ணம் தலை தூக்கியது.

வன்மம் மனதில் தோன்றி அது மற்றவர் மீதும் பாய்ந்தது. குழந்தையைக் கடிந்து கொண்டாள். வேலைக்காரப் பெண்ணிடம் முறைத்துக் கொண்டாள். வயசான வாட்ச்மேனைச் சம்பந்தமில்லாமல் திட்டினாள். அலுவலகத்திலும் உறுமிகொண்டே இருந்தாள்.

வண்டியில் வரும்போது ஷங்கர் சகஜமாகப் பேச முயல அவனையும் கடித்து அனுப்பினாள்.

தூக்கம் வந்து தொலைப்பேனா என்றது.

‘கடஞ்செடுத்த நம்பிக்கைத் துரோகம், நல்லவன் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டான். என் வாழ்க்கையே போச்சு’

மனது கிடந்து அலை மோதியது.

கண் விழித்த போது நன்கு விடிந்திருந்தது. குழந்தையைக் காணவில்லை.

ஹாலில் டிவி சத்தம் கேட்டது.

நல்ல வேளையாக அன்று ஞாயிற்றுக் கிழமை, பள்ளி விடுமுறை.

சோம்பலுடன் ஃபோனை நோண்டினாள்.

வாட்ஸ் அப்பில் ஷங்கரின் குறுஞ்செய்தி இருந்தது. படிக்க மனதுக்கு இதமாக இருந்தது.
பளீரென வந்தனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஆடு ஓநாயுடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது.




(தொடரும்)

2 comments:

  1. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று அவளுக்குத் தெரியவில்லையே என்ன இருந்தாலும் பெண்புத்தி பின் புத்திதானோ

    ReplyDelete
  2. சில நாட்கள் இணயத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இன்றுதான் மீண்டும் இணைப்பு கிடைத்தது.

    ReplyDelete