Sunday, February 14, 2016

தந்திரவியூகம் - 6

அத்தியாயம் - ஆறு

காலை பத்து மணிக்கு கவிஞர் கவிப்பித்தன் டைரக்டர் சுந்தரபாண்டியனின் முன்னால் அமர்ந்து இருந்தார்.

நடப்பது கனவா,நனவா என்று நேற்று முதல் புரிபடாமல் இருந்தது அவருக்கு.

இவ்வளவு பெரிய இயக்குனர் தன்னை அருகில் அமர வைத்து நீண்ட நாளைய நண்பன்போல பேசுவது மனதுக்கு இதமாய் இருந்தது.

நட்பு பற்றி ஒரு கவிதையை எடுத்து விட்டார்.

அந்த வேளையில் இசைவேந்தரும் உள்ளே நுழைய அவரை அப்படியே நிற்கும்படி சைகை செய்தார் இயக்குனர்.

கவிதை முடிவில் எழுந்த பலத்த கரகோஷம் கவிஞரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இசைவேந்தரைக் கண்டதும் அவர் காலில் விழ வினைய, அவர் தடுத்து,

‘தமிழ் யாருக்கும் தலை வணங்கக் கூடாது கவிஞரே’ என்றார்.

அது மட்டுமன்றி, அவரை அப்படியே ஆரத்தழுவித் தன் உவகையை வெளிப்படுத்தினார்.

அதிர்ஷ்டதேவன் புன்னகைத்தான்.

அந்தப்படத்தில் எல்லாப் பாடல்களுமே கவிஞருக்கு வழங்கப்பட்டன.

நாட்கள் நகர்ந்தன.

கந்தன் இன்னும் நண்பர்களுடனேயே தங்கினான்.

அவன் விரைவில் புது ஜாகைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகப் பட்டது.

எல்லோருக்குமே அதுதான் சரியெனவும் பட்டது.

மறுநாள் தன்னைக் காணுமாறு சுந்தரபாண்டியனார் கவிஞருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

மறுநாள் காலை 10 மணி.

சுந்தரபாண்டியன் வணக்கத்துடன் கவிஞரை வரவேற்றார்.

பொதுப்படையாகப் பேசிவிட்டு முகனூல் பற்றி பேச்செடுத்தார். மெதுவாக பேச்சு கமலினி பக்கம் நகர்ந்தது.

தனக்கு அவள் மேலுள்ள பிரேமத்தை வெளிப்படுத்திய இயக்குனர் கவிஞர் மூலம் ஒரு உதவி எதிர்பார்ப்பதாக இழுத்தார்.

தனக்கு வாழ்வளித்த தெய்வமாயிற்றே, எப்படி மறுப்பதென்று கவிஞர் மென்று முழுங்கினார்.

என்ன நடக்கக்கூடாதென்று எண்ணினாரோ அதுவே நடந்தது.

கமலினியைக் காண தன்னை அழைத்துச் செல்லுமாறு வேண்டினார்.

கவிஞருக்குத் தொண்டை வரண்டது. தலை சுற்றி மயக்கம் வருவதுபோல் தோன்றியது.

தொலைபேசி அழைப்பொன்று வர இயக்குனர் பரபரப்பானார்.

கவிஞரைப் பிறகு பார்ப்பதாகச் சொல்லி, சைகையால் விடை கொடுத்தார்.

அங்கிருந்து எப்படி அறைக்கு வந்து சேர்ந்தான் என்று கந்தனுக்கு நினைவில்லை.

அன்றிரவு மறுபடியும் நண்பர்கள் கூடினர்.

கந்தன் அழாக்குறையாக தன் நிலையை விளக்கினான்.

அதற்கு நேர் எதிராக தொலைக்காட்சியில் தில்லுமுல்லு படம் சுவாரசியமாகப் போய்க்கொண்டு இருந்தது.

தேங்காய் சீனிவாசனும் சௌகார் ஜானகியும் போட்டி போட்டு கிச்சுக்கிச்சு மூட்டினார்கள்.

ஜோசப் தீர்மானமாக ஒன்றைச் சொன்னான்.

‘நாம உருவாக்கினதை நாமளே அழிச்சிடுவோம்’

‘புரியிரமாதிரி சொல்லுடா என் இவனே’ இது பாலன்.

‘கமலினியக் கொன்னுடுவோம்’

‘டேய்,என்னடா சொல்ற?’ சுந்தர் பேயாய்க் கத்தினான்.

எல்லோருக்கும் அதிர்ச்சி. ஜோசப் தொடர்ந்தான்.

‘நீ ஏன் மச்சி டென்ஷன் ஆற, நான் சொன்னது நம்ம கற்பனைக் கதாபத்திரத்த’

செந்தில் ‘எப்படி?’

‘உயிரோட இருந்தா நம்ம நண்பன் எப்படியும் அவளை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தணும். அது இந்த ஜென்மத்தில முடியாது. சோ, இத தவிர வேற வழியில்ல’

எல்லோரும் தலையாட்டினார்கள்.

மறுநாள் காலை கவிப்பித்தன் அவசரமாக திருநெல்வேலி செல்வதாக இயக்குனருக்குத் தகவல் அனுப்பினார்.

மறுநாள் தினசரிப் பத்திரிகைகளில் கமலினிக்கு இரங்கல் கவிதையொன்றை பிரசுரித்தார்.

முகனூலில் அவர் பக்கத்தில் ‘போய் வா சினேகிதியே’ என உருக்கமாக ஒரு கவிதை.

கமலினியின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இரங்கல் செய்திகள் குவிந்தன.

4 நாட்களின் பின்னர், தாடியுடனும் சோகத்துடன் தன்னைக் காண வந்த கவிஞரை ஒன்றுமே கேட்காமல் பார்வையாலேயே அனுதாபம் தெரிவித்தார் இயக்குனர்.

வெளியே தூரத்தில் எங்கோ வானவில் தோன்றியது.



(முற்றும்)

2 comments:

  1. சுபமாகவே முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி ஐயா. நீங்கள் தரும் ஊக்கம் எனக்குப் பெரிய உந்துதல்.

    ReplyDelete